வவுனியாவில் 60 குளங்கள் வான் பாய்கின்றன : 02 குளங்கள் உடைப்பு : மாவட்ட அரச அதிபர்!!

2566

குளங்கள்..

வவுனியாவில் 60 குளங்கள் வான் பாய்வதுடன், 02 குளங்கள் உடைப்பு எடுத்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன தெரிவித்துள்ளார். மாவட்ட அனர்த்த நிலை தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் புயல் தாக்கம் காரணமாக பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படவில்லை. இருப்பினும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் பிரதேச செயலகங்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கையாக சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக பாதிப்புக்களை குறைக்க கூடியதாக இருந்தது.

குறிப்பாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 60 குளங்கள் வான் பாய்கின்றன. வவுனியா வடக்கில் இரு குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. உடைப்பெடுத்த குளங்களை திருத்தி அமைக்கும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா வடக்கில் தாழ் நிலப்பகுதிகளில் இருந்த 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை முற் கூட்டியே வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று தங்கவைக்கப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

வவுனியா மாவட்ட இந்து, இஸ்லாம், பௌத்த, கிறிஸ்தவர்களின் பிரார்த்தனைகளுடன் பாரிய பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.