தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ் குறித்து அவதூறாக பேசிய அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வோர்னருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.
இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், நாளை கேப்டவுனில் தொடங்குகிறது. இந்நிலையில் போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியின் போது தென்னாபிரிக்க விக்கெட் கீப்பர் டிவிலியர்ஸ் கையுறையை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தினார், என வானொலிக்கு அளித்த பேட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்தார். இதை தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் மறுத்தது.
மேலும் அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சு பயிற்சியாளர் கிரேக் மெக்டர்மாட், வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ஆகியோர் இது போன்ற சம்பவம் நடக்கவில்லை என உறுதியாக கூறியுள்ளனர்.
இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) நடுவர்கள் தலைவர் ரோஷான் மகானாம, டேவிட் வோர்னருக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் (1,78,502) அபராதமாக விதித்தார்.
இதுகுறித்து மகானாம கூறுகையில் சர்வதேச போட்டிகளில் நடந்த விஷயத்தை எந்த ஒரு வீரரும் பொது இடங்களில் விவாதிக்கக் கூடாது இதை வோர்னர் மீறியுள்ளார்.
போட்டியில் நடந்த சம்பவம் குறித்து எதிரணி வீரரை இழிவுபடுத்தியுள்ளார். இது முதல் தர விதிமீறல் என்பதால் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.





