வவுனியாவில் புயலால் பகுதியளவில் பாதிப்படைந்த வீடுகளுக்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை!!

933

புயலால்..

வவுனியா மாவட்டத்தில் புரெவி புயலின் காரணமாக பகுதியளவில் பாதிப்படைந்த வீடுகளுக்கு முதல் கட்டமாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் அனர்த்த நிலமைகள் தொடர்பில் இன்று கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டாம் திகதி இரவு புரெவி புயல் அனர்த்தத்தினால் வவுனியா மாவட்டத்தில் சிறு சிறு பாதிப்புக்கள் ஏற்பட்ட போதும் பெரியளவிலான பாதிப்புக்கள் எவையும் ஏற்படவில்லை.

புயல் காலப்பகுதியில் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கியிருந்தோம். இதனால் பெரியளவில் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

இருந்த போதிலும், வவுனியா பிரதேச செயலக பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 96 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 35 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 255 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 4 வீடுகளும் சேதமடைந்துள்ளன. இவ்வாறு சேதமடைந்த வீடுகளுக்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் பணம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் மழை காரணமாக 60 குளங்கள் வான் பாய்கின்றன. வவுனியா வடக்கு பகுதியில் இரு குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.

அதனை இராணுவத்தினரின் உதவியுடன் புனரமைக்கும் நடவடிக்கைளும் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்தும் மழை பெய்வதால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.