மொரட்டுவ விபத்து..
மொரட்டுவை பகுதியில் இரவு நேர மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்த இரண்டு சிறுமிகள் மற்றும் கருவிலிருந்த சிசு ஆகியோரின் பூதவுடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டன. மொரட்டுவை – எகொடஉயன புனித மரியா தேவாலயத்தில் நேற்று மாலை இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.
7 மற்றும் ஒன்றரை வயதான பெண் குழந்தைகளின் பூதவுடல்களுடன், தாயின் கருவிலிருந்த சிசுவின் பூதவுடலும் மக்கள் அஞ்சலிக்காக எகொட உயன பகுதியிலுள்ள அவர்களது உறவினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பூதவுடல்கள் மீதான இறுதிக்கிரியைகள் பெருந்திரளான மக்களின் கண்ணீர் கதறல்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.
மொரட்டுவை – எகொடஉயன பகுதியில் கடந்த 4ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதுண்டு இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்திருந்தனர்.அத்துடன், கர்ப்பிணியான தாய், சம்பவத்தில் படுகாயமடைந்ததுடன், அவர் பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தாய், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.எவ்வாறாயினும், விபத்தால் குறித்த தாயின் கருவிலிருந்த சிசுவும் இறந்திருந்தது என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
தாயின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ள நிலையில் அவர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை, இரவு நேர மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட நிலையில்,விபத்தினை ஏற்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, இரவு நேர பந்தயத்தில் ஈடுபடும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களின் ஓட்டுநர்கள் மற்றும் சாரதிகளைக் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மிரிஹான பகுதியில் இரவு நேர மோட்டார் சைக்கிள் பந்தயத்துக்காகத் தயாராக இருந்த 24 மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்ததுடன், 40 பேரைக் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, இரவு நேர மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.