வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளிகள் இருப்பிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திறந்து வைப்பு!!

1134

பொது வைத்தியசாலையில்…

வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட நோயாளிகள் இருப்பிடம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்பன இன்று (12.12.2020) மதியம் 3 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

கோவிட் தொற்று நோய்த்தாக்கம் காரணமாக நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா வர்த்தக சங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தரும் நோயாளிகள் இருப்பதிற்கான இருப்பிடம்,

மற்றும் வைத்தியசாலையின் அனைத்து விடுதிகள், வெளிநோயாளர் பிரிவு, சிகிச்சை பிரிவுகள் என்பனவற்றினை உள்ளடக்கி அனைத்து இடத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் இவ்வாறு அமைத்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார், வவுனியா வர்த்தக சங்க செயலாளர் ஆ.அம்பிகைபாலன், வர்த்த சங்க உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா வர்த்தக சங்கத்தின் சேவை தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார்,

வவுனியா வர்த்தக சங்கத்தினர் மிகவும் இக்கட்டான காலநிலையில் எம்முடன் கைகோர்த்தவர்களில் அவர்களும் ஒருவர் கோவிட்-19 தாக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் எமது வைத்தியசாலை இக்கட்டான சூழ்நிலையில் காணப்பட்ட சமயத்தில் தாமாக முன்வைந்து பல்வேறு உதவிகளை புரிந்தனர்.

குறிப்பாக ஊழியர்களுக்குரிய பாதுகாப்பு அங்கிகள், உடல் வெப்பமானிகள், நோயாளிகள் சமூக இடைவெளியினை பேணி சிகிச்சை பெற கொட்டகை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற பல்வேறு நலத்திட்டத்தினை புரிந்துள்ளதாக தெரிவித்தார்.