வீதியில் சிதறிக் கிடந்த பணம்..
கிளிநொச்சி அம்பாள்புரம் வீதியில் காற்றில் பறந்துசென்ற பெரும்தொகை பணத்தையும் சேகரித்த கிளிநொச்சி இளைஞர்கள் உரியவரிடம் ஒப்படைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று காலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் உள்ள ATM இயந்திரத்தில் 75 ஆயிரம் ரூபாய்யை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி பாடசாலை ஆசிரியர் வ.புஸ்பராசா என்பவர் திருநகர் ஊடாக பாரதிபுரம் செல்லும் போது கனகபுரம் வீதியடியில் தனது பையைப் பார்த்தபோதுதான் அவரது பணம் முழுவதும் தவறி விழந்துள்ளமை தெரியவந்தது.
உடனே வந்த வழியே திரும்பிச் சென்ற அவர் அவ்வீதியில் இருந்த கடைகளிலும் மாவட்டச் செயலக பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பலரிடம் விசாரித்த போதும் தொலைந்த பணம் கிடைக்கவில்லை.
பின்னர் கிளிநொச்சி சந்தை விளம்பர ஒலிபரப்பு சேவையில் தனது தொலைபேசி இலக்கத்தை தெரிவித்து அறிவிப்புச்செய்துவிட்டு பாரதி புரத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்று பணம் தொலைந்தவிடயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மிகக் கவலையுடன இருந்துள்ளார்.
சில மணித்தியாலம் கடந்ததும் தொலைபேசி ஊடாக குறித்த ஆசிரியரைத் தொடர்புகொண்ட இளைஞர் ஒருவர் நீங்கள் தொலைத்த பணத்தினை தானும் நண்பர்களும் கண்டெடுத்ததாகவும் உங்களது முகவரியைத் தெரிவித்தால் அதனை வீட்டுக்கு கொண்டுவந்து ஒப்படைப்பதாகவும் தெரிவித்து முகவரியை பெற்றுள்ளனர்.
சிலநிமிடங்களில் வீட்டுக்கு வந்த இளைஞர்கள், தாம் அம்பாள் புரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தாம் அவ்வழியே வரும்போது முதலில் ஒரு ஐயாயிரம் ரூபாயைக் கண்டதாகவும்,
பின்னர் வழிநெடுகிலும் மொத்த எழுபத்தையாயிரம் ரூபாயும் சிந்திக் கிடந்ததாகவும் அதனைச் சேகரித்த பின்னர் யாராவது தவறவிட்டுள்ளார்களா என்று அப்பகுதியில் விசாரணை செய்தபோது ஆசிரியரின் தொலைபேசி இலக்கம் கிடைத்தாக தெரிவித்து 75ஆயிரம் ரூபாய் பணத்தினை ஆசிரியரிடம் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் இந்த முன்னுதாரணமான செயலால் மிகவும் மனம் நெகிழ்ந்து போன ஆசிரியர் அவர்களுக்கு சன்மானம் வழங்கும் நோக்கில் 10,000 ரூபாய் பணத்தினை வழங்க முன்வந்தபோதும்,
அவர்கள் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து எவ்வித பணத்தொகையினையும் பெற்றுக்கொள்ளாமல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர்களின் நற்செயலை அறிந்த பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.