சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவர் கிரேம் ஸ்மித் திடீரென அறிவித்துள்ளார்.
மிக குறைந்த வயதில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு தலைவரான கிரேம் ஸ்மித்துக்கு தற்போது 33 வயதாகிறது. 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித், 109 போட்டிகளுக்கு தலைவராக பணியாற்றியுள்ளார். அதிக டெஸ்ட் வெற்றியை பெற்ற தலைவர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார் ஸ்மித்.
இந்நிலையில் அவுஸ்திரேலியா அணி உடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக ஸ்மித் நேற்று (04) திடீரென அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளில் மிகவும் கடினமான முடிவு இது. ஏப்ரலில் கடந்த ஆண்டு நடந்த கணுக்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகிருந்தே நான் ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது, அவுஸ்திரேலியா அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் செஞ்சுரியனில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 281 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அடுத்து போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா 213 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது கேப்டவுனில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா மோசமாக விளையாடி வருகிறது. கடைசி நாளான இன்று தென்னாபிரிக்கா தோல்வியை தவிர்க்க போராட வேண்டியிருக்கும்.
அப்படி தோல்வி அடையும் பட்சத்தில் தென்னாபிரிக்கா அணி டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும். போட்டி சமநிலையில் முடிந்தால் டெஸ்ட் தொடர் சமனில் முடிந்துவிடும். அதற்கு முன்னதாகவே தலைவர் ஸ்மித், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






