யாழில் இருந்து அனுமதிப் பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் அரச சொத்துக்கள் மற்றும் வெடிபொருட்களின் பாகங்களைக் கனரக வாகனத்தில் கடத்தில் செல்ல முற்பட்ட 4 பேர் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நல்லூர்ப் பகுதியில் இருந்து தென்னிலங்கைக்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே விசேட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் கைத்து குறித்த கனரக வாகனத்தின் சாரதி மற்றும் அவருடன் வந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் அவர்களிடம் நடாத்திய விசாரணையில் அடிப்படையில் குறித்த சட்டவிரோத பொருட்களை அவர்களிடம் ஒப்படைத்த இருவரைத் தேடி பொலிஸார் வலைவிரித்திருந்தனர்.
இந்நிலையில் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் தேடப்பட்டு வந்த ஏனைய இருவரும் நேற்று நண்பகல் வேளை கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதன்பின்னர் கைப்பற்றப்பட்ட கனரக வாகனத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் யாழ்.பொதுநூலகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் வைத்து சோதனையிடப்பட்டது. இதன்போது ஏராளமான வெடித்த செல் கோதுகள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான இருப்புப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் குறித்த வாகனத்தில் ஏற்றிவந்த இருப்புகளுக்கான அனுமதியும் பெறப்படவில்லை என்பதும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.