யாழ்.மாவட்டத்தில் சமூகச் சீர்கேடுகள் இடம்பெறுகின்ற விடுதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.பொலிஸாரினால் பிடிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
யாழ்.அரியாலை ஆனந்தன் கடையில் அமைந்துள்ள விடுதி மற்றும் யாழ்.அம்மன் வீதியில் மசாஜ் நிலையம் என்பன கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்த 5 பெண்கள் உள்ளடங்கலாக 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கிளிநொச்சி, அனுராதபுரம், மாத்தளை, யாழ்.உரும்பிராய் ஆகிய பகுதிகளினைச் சேர்ந்த 23 வயதிற்கும் 36 வயதிற்கும் இடைப்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக யாழ்.மாநகர முதல்வர் நேற்று கருத்துத் தெரிவிக்கையில்,
மாநகர சபை அனுமதி பெற்றிருந்தாலும் சமூகச் சீர்கேடான விடயங்கள் விடுதிகளில் நடந்தால் அவ்விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அத்துடன் அன்றைய தினத்தில் விடுதிகள் பிடிக்கப்பட்ட போது, அது தொடர்பாக நான் அறிந்த போது, உடனடியாக அவ்விடத்திற்கு மாநகர சுகாதார பரிசோதகர்களையும் அனுப்பியிருந்தேன் எனத் தெரிவித்தார்.
இவ்வாறான சமூகச் சீர்கேடான விடயங்கள் நடைபெறுகின்றது என அறிந்தால் அது தொடர்பாக உடனடியாக அறிவிக்கப்பட்டால் அது தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமென முதல்வர் மேலும் தெரிவித்தார்.