
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 9வது லீக் ஆட்டம் மிர்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் நிதானத்துடன் ஆரம்பித்து தடுமாற்றத்துடன் இன்னிங்சை நிறைவு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 159 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 160 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு தொடக்க வீரர் ரகானே (56), தவான் (60) ஆகியோர் பொறுப்புடன விளையாடி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
அதன்பின்னர் வந்த ரோகித் சர்மா (18), தினேஷ் கார்த்திக் (21) ஆகியோர் வெற்றியை உறுதி செய்தனர். 106 பந்துகள் மீதமிருந்த நிலையில் 160 ஓட்டங்களை எடுத்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இப் போட்டியில் வெற்றிபெற்றாலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படாமை குறிப்பிடத்தக்கது.





