வவுனியா பூந்தோட்ட நலன்புரி நிலையத்திலுள்ள குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்படவுள்ளன!!

498

Poonthottam camp

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள 100 குடும்பங்களுக்கு நெடுங்கேணி, நைனாமடு பகுதியில் 300 ஏக்கரை ஒதுக்கி அங்கு அவர்களை குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக வவுனியா மாவட்டச் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

1991ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற யுத்தத்தால் வவுனியா எல்லையோரப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலும் நெடுங்குளம் நலன்புரி நிலையத்திலும் தங்கினர்.

இந்நிலையில் 2003ஆம் ஆண்டு நெடுங்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறியதால் குறித்த நலன்புரி நிலையம் மூடப்பட்டது.

இருப்பினும், பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் சொந்தக் காணிகள் இல்லாத, காணி உறுதிகள் இல்லாத 100 குடும்பங்கள் தங்கியுள்ளதால் மேற்படி நலன்புரி நிலையம் தொடர்ந்து செயற்படுகிறது.

இந்நிலையில் இவர்களுக்கு நிரந்தர காணிகளை ஒதுக்கி அங்கு அவர்களை மீள்குடியேற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.