வவுனியாவிலிருந்து ஆரம்பமான மக்கள் எழுச்சி போராட்டம் : அணி திரண்ட மக்கள்!!

2257

மக்கள் எழுச்சி போராட்டம்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 4ஆம் நாள் பேரணி இன்று (06.02) காலை 7.30 மணியளவில் வவுனியா புதிய பேரூந்து நிலைய முன்றலிருந்து ஆரம்பமாகியது.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம்,

மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய பேரணியானது வவுனியா நகரை வலம் வந்து வவுனியா- மன்னார் பிரதான வீதியுடாக மன்னாரை சென்றடைந்து மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியுடாக துணுக்காய் சென்று மாங்குளம் ஊடாக கிளிநொச்சி நகரை சென்றடையவுள்ளது.

குறித்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என 1000க்கு மேற்பட்டவர்கள் அணி திரண்டு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.