வவுனியா வைத்தியசாலையில் விரைவில் இரத்த வங்கி!!

898

K.Akilendran

வட மாகாணத்திற்கான இரத்த வங்கி மிக விரைவில் வவுனியா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படும் என வவுனியா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

வட மாகாணத்திற்கான இரத்த வங்கி வவுனியா வைத்தியசாலையில் ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இது மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை வவுனியா பொது வைத்தியசாலையில் பெண் நோயியல் சிகிச்சை பிரிவு வட மாகாண சுகாதார அமைச்சினால் சகல வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டு தற்போது இயங்கி வருகின்றது. இதன் காரணமாக வட மாகாணத்தில் பெண் நோய் தொடர்பாக சிறந்த சேவையை எமது வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளமுடியும்.

இதுவரை காலமும் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்கு வேறு பிரதேசங்களுக்கு சென்று வந்தமையால் பல அசௌகரியங்களை எதிர்கொண்டிருக்கலாம், எனவே வவுனியா பொது வைத்தியசாலையில் இனி வரும் காலங்களில் பெண் நோயியல் சிகிச்சையை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.