வவுனியா மாவட்டத்தில் உளுந்தினை சந்தைக்கு விடாது பதுக்க வேண்டாம் : கமக்காரர் ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனம்!!

2272

உளுந்து..

நாட்டில் உளுந்து இறக்குமதிக்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் உளுந்து செய்கையாளர்கள் தமது உற்பத்திகளை பதுக்காது உடன் சந்தைப்படுத்துமாறு வவுனியா மாவட்ட கமக்காரர் ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊடங்களுக்கு சம்மேளத்தினர் வழங்கிய அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கம் உளுந்தின் கேள்வியைக் கருத்திற்கொண்டு இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இறக்குமதியாளர்களுக்கு வழங்கியுள்ளது. இறக்குமதியாளர்களினால் விநியோகிக்கக் கூடிய உச்ச விலையானது 640 ரூபா வரை இருக்கலாமென அறியப்படுகின்றது.

இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் உளுந்தின் சில்லறை விலை 750ரூபா தொடக்கம் 800 ரூபாய்க்கு இடைப்பட்டதாகவே இருக்கும். எனவே உளுந்தை சந்தைக்கு விடாது அதிக விலைக்கு விற்க காத்திருக்கும் விவசாயிகள் எதிர்காலத்தில் நட்டமடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

இதேவேளை விதை உளுந்துச் செய்கைக்காக விதையினை விதைகள் உற்பத்தித் திணைக்களத்தில் பெற்ற விவசாயிகள் மீள விதை உளுந்தை தரத்தின் அடிப்படையில் 870 – 920 ரூபா விற்கு குறித்த திணைக்களத்திற்கு விற்க இயலும்.

இதுவரை விதை உளுந்திற்கான தேவையின் 1/3 கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விதை உளுந்துகளை மீளச் செலுத்தாதவர்களுக்கான சலுகைகள் எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என்பதனையும் குறித்த திணைக்களம் கவனத்திற்கு கொண்டு வருகிறது எனவும் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.