பதுளை பசறை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து : உடனடியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!

4419

விபத்து..

பதுளை – பசறை, 13ஆவது மைல்கல் பகுதியில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு முதற்கட்டமாக 15,000 ரூபாயை உடனடியாக வழங்க, ஊவா மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி,

பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன், லுணுகலை பிரதேசசபையின் தவிசாளருடன் கலந்துரையாடி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான சவப் பெட்டிகளை வாங்கிக் கொடுக்கவும், அவர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் என தெரியவருகிறது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கான நிதி உதவியை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, காயமடைந்தவர்களுக்கான உரிய சிகிச்சைகளை வழங்கவும் தேவையேற்படின் அவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்புக்கு மாற்ற நடவடிக்கை முன்னெடுக்குமாறு, சுகாதாரத் துறையினருக்கு, செந்தில் தொண்டமான் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, விபத்துக்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ஊவா மாகாண போக்குவரத்துக்கு ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ள அவர்,

விபத்துக்குள்ளான பேருந்தில் ஜீபிஎஸ் தொழிநுட்பம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அதைக் கொண்டு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.