பின்தங்கிய 10 கிராமங்களை..
ஒரு கிராமம் ஒரு வங்கி என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வவுனியாவில் பின்தங்கிய வறுமைக் கோட்டிற்குட்பட்ட 10 கிராமங்கள் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட 10 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு அக் கிராமத்தில் வாழும் மக்களின் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் ஒரு கிராமம் ஒரு வங்கி என்ற செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு, தோட்ட செய்கை, கைத்தொழில்கள், பால் உற்பத்தி, விவசாயம் என 224 திட்டங்கள் வகுக்கப்பட்டு அத்திட்டங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் ஒரு கிராமத்திற்கு ஒரு வங்கி என்ற அடிப்படையில் 10 வங்கிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.
வங்கிகள் குறித்த பயனாளிகளுக்கு இலகு அடிப்படையில் கடன்களை வழங்கி அவர்களை உற்பத்தியாளர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
அந்த அடிப்படையில் வவுனியாவின் ஈஸ்வரிபுரம், மறவன்குளம், ஆச்சிபுரம், கள்ளிக்குளம் ஆகிய நான்கு கிராமங்களின் பயனாளிகளுக்கான கடன்கள் தெரிவு செய்யப்பட்ட வங்கிகளால் முதல் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.