சோதனைச் சாவடி..

கொரோனா காலப்பகுதியில் வவுனியா நெளுக்குளம் – வீரபுரம் பாதையில் உள்ள சூடுவெந்தபுலவு பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக இராணுவ சோதனைச்சாவடி நிரந்தரமாக மாற்றப்பட்டு இராணுவ சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

கடந்த வருடம் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அதன்போது மக்களை கண்காணிக்கும் வகையில் வவுனியா மாவட்டத்தின் சூடுவெந்தபுலவு, ஓமந்தை, ஈரப்பெரியகுளம், கனகராயன்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தற்போது, ஓமந்தை சோதனைச் சாவடி நிரந்தரமாக்கப்பட்டுள்ள நிலையில் நெளுக்குளம் – வீரபுரம் வீதியில் உள்ள சூடுவெந்தபுலவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சோதனை சாவடி தற்போது நிரந்தர கட்டுமாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வீதி தடைகள் போடப்பட்டு நிரந்தர சோதனைச் சாவடியாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த வீதியை அண்டிய கரையில் சீமந்திலான தளம் அமைக்கப்பட்டு அதன்மேல் நிரந்தர கொட்டகைகள் அமைக்கப்பட்டு, சிறிய வீதி கண்காணிப்பு காவலரணும், வீதி தடைகளும் போடப்பட்டு இராணுவத்தினரும், பொலிசாரும் இணைந்து கடமையில் ஈடுபடுவதுடன், அவ் வீதி வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.






