வவுனியா வர்த்தக சங்கத்தினருக்கும் சுகாதாரப் பிரிவினருக்கிடையே கலந்துரையாடல் : பல தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

1662

கலந்துரையாடல்..

வவுனியா மாவட்ட வர்த்தக சங்கத்தினருக்கும் சுகாதார பிரிவினருக்கிடையிலான கலந்துரையாடலொன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (03.04.2021) காலை 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தரம் பிரித்து கழிவகற்றல், உணவங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சுகாதார சான்றிதழ் கட்டாயமாக்கல், கோவிட் – 19 நடைமுறையினை இறுக்கமாக பின்பற்றுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் தரம் பிரித்து கழிவகற்றல் நடவடிக்கைக்கு வர்த்தக சங்கத்தினரின் ஒத்துழைப்பினை சுகாதார பிரிவினர் கோரியதுடன் காலை நேரத்தில் உணவுக் கழிவுகளும் மாலை நேரத்தில் பிளாஸ்டிக், காகிதங்கள், கண்ணாடி போன்ற கழிவுகளும் நகரசபை கழிவகற்றில் பிரிவினரினால் எடுத்துச் செல்லப்படும் என்பதுடன்,

கழிவகற்றல் தொடர்பில் முறைப்பாடுகள் எவையும் இருக்கும் பட்சத்தில் 024 -2222488 என்ற தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இவ் கலந்துரையாடலில் வவுனியா வர்த்தக சங்க உறுப்பினர்கள் , சுகாதார பிரிவினர் என 50க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.