வவுனியாவில் கணிதப் பிரிவில் முதலிடத்தினை பெற்ற மாணவன் அபிதன் : ஓட்டோமொபைல் துறையில் சாதனை படைப்பதே தனது இலச்சியம்!!

4129

அசோக்குமார் அபிதன்..

கற்றல் நேரத்தில் கல்வியை செவிமடுத்து கற்றால் சிறந்த பெறுபேற்றினை பெறலாம் எனவும் வவுனியாவில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற அசோக்குமார் அபிதன் என்ற மாணவன், ஓட்டோமொபைல் துறையில் சாதனை படைப்பதே தனது இலச்சியம் என தெரிவித்துள்ளார்.

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கணிதப் பிரிவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் அசோக்குமார் அபிதன் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 326வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எனது இலட்சியம் சிறுவயது தொடக்கம் மாறிக்கொண்டே சென்று கொண்டிருந்தது. கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தின் போதே எனது இலட்சியம் ஆட்டோமொபைல் துறையின் மீது மாற்றம் அடைந்தது. இலட்சியத்தினை அடைய வேண்டுமென கற்றேன் தற்போது சாதனை படைத்துள்ளேன்.

கடந்த இரண்டு வருடங்களாக நான் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. அதன் பின் கோவிட் -19 தொற்று காரணமாக எனது தனியார் கல்வி நடவடிக்கைகளையும் தொடர முடியாத நிலமை ஏற்பட்டிருந்தது. பொழுது போக்கில் எனக்கிருந்த நாட்டம் சலித்துப் போனதன் காரணமாக கல்வியில் சற்று ஆர்வம் காட்ட முயற்சித்தேன்.

உண்மையில் கல்வி எனக்கு உறுதுணையாக அமைந்தது மகிழ்ச்சியான விடயம். அத்துடன் கற்றல் நேரத்தில் கல்வியை செவிமடுத்து கற்றால் சிறந்த பெறுபேற்றினை பெறமுடியும். குறித்த திறமைச் சித்திகளை பெறுவதற்கு காரணமாகவிருந்த குடும்பத்தினர், அதிபர், ஆசிரியர்கள், உறவினர்கள், சக நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்தார்.