நாட்டை முடக்கினால்..

நாட்டை முற்றாக முடக்குமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தாலும் சாதாரண மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை கவனத்தில் கொண்டு அரசாங்கம் அந்த தீர்மானத்திற்கு செல்லவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்கள் நாட்டை முடக்கியதால் எந்தளவுக்கு கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பதை மக்களே செயற்பாட்டு ரீதியாக அனுபவிக்க நேர்ந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு புறக்கோட்டை பகுதிக்கு நேற்று விஜயம் செய்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டை முற்றாக முடக்குமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டம் செய்து, அரசாங்கத்தின் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன.

மூன்று நாட்கள் முடக்கியமை மற்றும் பகுதி பகுதிகளாக முடக்கப்படுவதன் மூலம் ஏற்படும் கஷ்டங்கள் தற்போது மக்களுக்கு தெளிவாகியுள்ளது. விவசாயிகள், சிறிய மற்றும் நடுதர தொழில் முனைவோர்கள் ஆகியோரை எடுத்துக்கொண்டாலும் நாட்டைமுடக்கும் போது சாதாரண மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகுவார்கள்.

அரசாங்கம் என்ற வகையில் மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாவதை தடுக்க அத்தியவசிய பொருட்களை நாடு முழுவதும் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
-தமிழ்வின்-





