திருநாவற்குளத்தில்…
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் ஒருவர் நேற்று (23.05) இரவு மரணமடைந்துள்ளார். குறித்த நபர் வசிக்கும் பகுதியில் ஒருவர் அண்மையில் கொரோனா தொற்று காரணமாக மரணடைந்ததுடன், சிலர் கொரோனா தொற்றாளர்களாகவும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அத்துடன் குறித்த நபர் கடந்த முதலாம் திகதியில் இருந்து 21 ஆம் திகதி வரை வவுனியா வைத்தியசாலையின் 4 ஆம் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். குறித்த விடுதியில் பணியாற்றிய வைத்தியர், தாதியர்கள் உட்பட சிலர் அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியும் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு திடீரென மரணமடைந்த குறித்த நபர் மீது பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளாது உடலை தகனம் செய்வதற்கும், உடலை இன்போம் செய்து குளிரூட்டியில் வைக்க அவசர அவசரமாக சுகாதாரப் பிரிவினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிளிநொச்சியில் விசம் அருந்தி மரணமடைந்த 15 வயது சிறுமியின் உடல் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அவ்வாறான நடைமுறைகளை சுகாதாரப் பிரிவினர் பின்பற்றும் போது, குறித்த மரணத்தில் மட்டும் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளாது அவசர அவசரமாக குளிருட்டுவதற்கும், தகனம் செய்வதற்கும் அனுமதி வழங்கியது ஏன் என அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன்,
மரணச் சடங்கில் கலந்து கொள்பவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை சுகாதாரப் பிரிவினர் வழங்குவார்களா எனவும் அச்சம் வெளியிட்டுள்னனர்.
இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரும் கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை எடுத்து மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தி அச்சம் இன்றி உடலை தகனம் செய்யவும்,
மரணச் சடங்கை நடத்தவும் அனுமதிப்பதுடன் கிராம மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.