வவுனியாவில் பயணத்தடை நீக்கப்பட்ட நிலையில் நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பு!!

2260

நகரில் மக்களின் நடமாட்டம்…

வவுனியா மாவட்டம் உட்பட நாட்டின் பல பாகங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று (25.05.2021) அதிகாலை 4.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணிவரையிலான காலப்பகுதியில் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்காக வழங்கப்பட்ட பயணத்தடை தளர்வில் வவுனியா மாவட்டத்தில் மக்களின் நடமாட்டம் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.

குறிப்பாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்த போதிலும், நகரப்பகுதியில் அதிகளவில் மக்கள் வருகை தந்து பொருட் கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக வவுனியா நகரப் பகுதியில் மருந்தகங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள், பழக் கடைகள், பலசரக்கு விற்பனை நிலையங்கள், வங்கிகள், புத்தகக் கடைகள், தொலைபேசி கடைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என்பன,

திறக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

மேலும் பயணத்தடையிலான இவ் காலப்பகுதியில் பயணிகள் போக்குவரத்து சேவைகள் எவையும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.