வவுனியா உட்பட பல மாவட்டங்களில் 70 கி.மீ வரை காற்றின் வேகம் அதிகரிக்கலாம்!!

2239

யாஸ் சூறாவளி..

இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள யாஸ் சூறாவளி மேலும் தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

யாஸ் சூறாவளி நாளை 26 ஆம் திகதி வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் மேற்கு வங்காள கரையை கடக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையின் மேல் மாகாணம், சப்பிரகமுவா, மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் தென் மாகாணங்களில் இன்று சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சப்பிரகமுவா, மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 150 மி.மீ க்கும் அதிகமான கனமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம். வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்.

சில நேரங்களில் நாட்டின் கரையோர பகுதிகளில் காற்று 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மத்திய மலைநாடு, வட-மத்தி மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் கேகாலை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களி்ல் காற்றின் வேகம் 70 கி.மீ வேகம் வரை அதிகரிக்கலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் ஏற்படும் வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் வங்காள விரிகுடாவின் கடற்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்வதை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.