பப்பாசி செய்கை…
வவுனியா நெடுங்கேணி, ஒலுமடு பகுதியில் இன்று (25.05) பிற்பகல் தொடக்கம் மாலை வரை வீசிய கடும் காற்றினால் பப்பாசி செய்கை முற்றாக அழிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
நெடுங்கேணி, ஒலுமடு பகுதியில் பிற்பகல் தொடக்கம் மாலை வரை கடும் காற்று வீசியது. குறித்த காற்றின் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் இருந்த ஆயிரம் பப்பாசி மரங்களில் 600 பப்பாசி மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
அத்துடன் அருகில் இருந்த தோட்டங்களில் வாழைகளும் முறிந்து வீழ்ந்துள்ளன. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயி கருத்து தெரிவித்த போது,
நான் ஒரு வருடத்திற்கு முன்பு 1000 பப்பாசி மரங்களை நட்டு அவை தற்போது காய்த்து வருகின்றன. மாதத்தில் மூன்று தடவை பப்பாசி பழங்களை விற்கக் கூடியதாகவிருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் முடக்கம் காரணமாக பப்பாசி பழங்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஒரு மாதமாக பப்பாசி பழங்களை நாம் பெரியளவில் மரத்தில் பறிக்கவில்லை. இதன் காரணமாக மரத்தில் ஏற்பட்டிருந்த பாரம் மற்றும் வீசிய கடும்காற்று என்பன காரணமாக பப்பாசி மரங்கள் முழுமையாக முறிந்து வீழ்ந்துள்ளன. இதனால் எனக்கு 30 இலட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது.
வருமானத்தை பெற்று குடும்ப சீவியத்தை போக்க முடியும் என விவசாயத்தை மேற்கொள்ளும் போது இவ்வாறு ஏற்படும் பாதிப்புக்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்ற மனவலிமையை கூட பாதித்துள்ளது.
இவ்வாறான அழிவுகளுக்கு அரசாங்கம் உரிய இழப்பீடுகளை வழங்குவதன் மூலமே எம்மை போன்ற விவசாயிகளை பாதுகாக்க முடியும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்தார்.