தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச வட மாகாண சபை அனுமதி!!

625

North

தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இணங்கினால், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த வடக்கு மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த வடக்கு மாகாண சபை ஏகமனதாக இணங்கியுள்ளதாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை இலங்கையின் உள்விவகாரத்தில் சர்வதேசம் தலையிடக் கூடாது என வடக்கு மாகாண எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வுகாண தவறியதன் காரணமாவே அதற்காக சர்வதேசத்தின் அழுத்தங்களை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஜனாதிபதியுடன், பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக உள்ளது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகள் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்துடனான நேரடியான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய பிரச்சினை தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தி வருகிறார்.

இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. அப்படியான நிபந்தனையை ஜனாதிபதி முன்வைக்க கூடாது என்றும் வடக்கு மாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.