வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விரைவில் 3.5 கோடி ரூபாய் பெறுமதியான பி.சீ.ஆர் இயந்திரம்!!

2129

பி.சீ.ஆர் இயந்திரம்…

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் சுகாதார பிரிவினர் மக்களிடம் பி.சீ.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் ஆய்வு கூடத்தில் மாத்திரமே பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு செய்யும் இயந்திரம் உள்ளமையினால் பரிசோதனை முடிவுகளில் தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பி.சி.ஆர் முடிவுகளை விரைவாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தினரால் பி.சீ.ஆர் இயந்திரம் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 3.5 கோடி ரூபாய் பெறுமதியில் பி.சீ.ஆர் இயந்திரம் உட்பட பரிசோதனை வசதிகளை ஏற்படுத்தி வழங்க சுகாதார அமைச்சு முன்வந்துள்ளது.

அந்த வகையில் இதனை அமைப்பதற்குறிய வசதிகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படுகின்றதா என்பதை ஆராயும் நோக்கில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (ஆய்வுகூட சேவைகள்) வைத்தியகலாநிதி சுதத் தர்மரட்ண இன்று (20.06.2021) காலை 8 மணியளவில் வைத்தியசாலையினை பார்வையிட்டார்.

வைத்தியசாலையின் இடங்கள், வசதிகள் என்பவற்றினை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கலைநாதன் ராகுலன் காண்பித்ததுடன் பி.சீ.ஆர் இயந்திரம் இன்மையினால் சுகாதார பிரிவினர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.