வவுனியா வைத்தியசாலையின் கொரோனா தடுப்பு சேவைக்கு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாராட்டு!!

1374

வவுனியா வைத்தியசாலை..

35 மில்லியன் பெறுமதியான பீ.சீ.ஆர் பரிசோதனைக்குரிய ஆய்வுகூட வசதிகளை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிப்பது தொடர்பாக பூர்வாங்க ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக,

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் (ஆய்வுகூட சேவைகள்) வைத்திய கலாநிதி சுதத் தர்மரட்ன வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கடந்த 20.06.2021 அன்று நேரடியாக விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்ததோடு வைத்தியசாலை ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவையையும் பாராட்டியிருந்தார்.

பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதில் உள்ள தாமதங்கள் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் க.ராகுலன் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு புள்ளிவிபரங்களுடன் தெளிவுபடுத்தியிருந்தார்.

மேலும் மத்திய சுகாதார அமைச்சின் தீர்மானத்திற்கமைய பீ.சீ.ஆர் பரிசோதனை ஆய்வுகூட உள்வாங்கலுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு பாராட்டி இருந்ததுடன் தனது திருப்தியையும் வெளிப்படுத்தினார்.

அத்தோடு ஆய்வுகூடம் ஸ்தாபிக்கப்பட்டு உடனடியாகவே பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏதுவாக மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கட்கு உரிய பயிற்சிகளை பெற்றுக்கொள்ள அனுராதபுரம் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பும் ஒழுங்குகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள் என பலரும் ஆக்கபூர்வமான தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.