வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை : அவ்வாறு இல்லை என்கிறார் வைத்தியர் கேதீஸ்வரன்!!

2765

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் சிலர் அவர்களது வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில்,

வடக்கில் அவ்வாறான சிகிச்சைகள் எவையும் இடம்பெறவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சகாயமாதாபுரம், வைரவர் கோவிலடிப் பகுதியில் கடந்த திங்கள் கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில், ஏனைய தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்காது குறித்த வீட்டை தனிமைப்படுத்தி அவ் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளதுடன், சுகாதாரப் தரப்பினர் சிலர் பக்கச் சார்பாகவும், பொறுப்பற்ற விதமாகவும் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் லவன் அவர்களை தொடர்பு கேட்ட போது,

குறித்த வீட்டில் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர்களை குறித்த வீட்டிலேயே தங்க வைத்து சிகிச்சையளிப்பதாகவும், அதனால் எந்த பாதிப்புக்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, கோவிட் தொற்றாளர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் முறை வடக்கு மாகாணத்தில் இல்லை என தெரிவித்திருந்தார்.

எனவே வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கட்டுப்பாடுகளை மீறி வவுனியா சுகாதாரத் துறையில் சிலர் செயற்படுகின்றார்களா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.