ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் சீனிவாசனை பதவி விலக உச்சநீதிமன்றம் உத்தரவு!!

489

Seenivasan6வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஆட்ட நிர்ணய சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் முத்கல் குழு ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்தியது.

இந்த குழு தனது அறிக்கையை கடந்த பெப்ரவரி 10ம் திகதி தாக்கல் செய்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கௌரவ உறுப்பினரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் என்.சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான ராஜ் குந்தரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சூதாட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது. ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து நீதிபதி பட்நாயக் தலைமையிலான குழு பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது..
ஐ.பி.எல். சூதாட்ட விசாரணை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற என்.சீனிவாசன் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என்பதே எங்களது கருத்து. அவர் பதவி விலகாவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.

ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முத்கல் குழு கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது இதனால் என்.சீனிவாசன் பதவி விலகாவிட்டால் விசாரணையை நியாயமாக நடத்த முடியாது.

விசாரணைக் குழுவின் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வெளிப்படுத்த முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  வரும் 27ம் திகதிக்கு இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.