ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது!!

315

Rajiv

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. அத்துடன், மாநில அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதையடுத்து, மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை பரிசீலனை செய்த உச்சநீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வாகன்வதி, தண்டிக்கப்பட்டவர்கள் மனு அளிக்காமலேயே அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது தவறு என வாதிட்டார்.

மேலும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்யக்கூடாது என்றும், அரசியல் சாசனப்படி அவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர், 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினோம் என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடினார்.