அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர்–நடிகைகள் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகர், நடிகைகள் மின்னல் வேகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டுகிறார்கள்.
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர்கள் ராமராஜன், செந்தில், பொன்னம்பலம், ஆனந்தராஜ், இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், நடிகைகள் குயிலி, பபிதா, சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் ஒவ்வொரு தொகுதியாக சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.
நடிகர் செந்தில் தனது பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா பிரதமரானால் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறும் என்று பேசி ஓட்டு கேட்டு வருகிறார். சில நேரங்களில் காமெடியாகவும் பேசி ஓட்டு சேகரிக்கிறார்.
நடிகர்கள் சிங்கமுத்து, குண்டு கல்யாணம், மனோபாலா ஆகியோரும் காமெடியாக பேசி பிரச்சாரம் செய்கிறார்கள். நடிகர் பொன்னம்பலம் ஓட்டு கேட்கும் போது சினிமாவில் நான் அடிவாங்குவேன். அதைப் பார்த்து நீங்கள் ரசிப்பீர்கள். அது இப்போது முக்கியம் அல்ல. தேர்தலில் தி.மு.க.–காங்கிரசுக்கு பாடம் புகட்டுவதே முக்கியம் என்று கூறி ஓட்டு கேட்கிறார்.
நடிகை குயிலி பேசும் போது தமிழக அரசின் திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார். நடிகர்–நடிகைகள் ஓட்டு கேட்டு வரும் போது கூட்டம் கூடுகிறது. அவர்களுக்கான பிரச்சார வாகனங்களை வேட்பாளர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு தொகுதியில் பிரச்சாரம் செய்த பிறகு அங்குள்ள ஹோட்டலில் தங்கி விட்டு மறுநாள் வேறொரு தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார்கள். தொடர்ந்து 1 மாதம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து தி.மு.க.வும் நடிகர்–நடிகைகளை பிரச்சாரத்தில் இறக்க உள்ளது. தி.மு.க.வுக்கு ஆசரவாக நடிகை குஷ்பு, நடிகர்கள் வாகை சந்திரசேகர், குமரி முத்து பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அவர்களுக்கான பிரச்சார திட்டங்களை தி.மு.க. தலைமை கழகம் வகுத்துக் கொடுத்துள்ளது.





