வவுனியாவில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பபடாத நிலையில் பல தொற்றாளர்கள் : மாவட்ட சுகாதார திணைக்களத்தின் உயர்மட்ட அழுத்தம் காரணமா?

2592

வவுனியாவில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படாத நிலையில் 10 இற்கும் மேற்பட்டவர்கள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் செல்வாக்கால் வீடுகளிலேயே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களில் சிலர் சுகாதார திணைக்களத்துடன் தொடர்புடைய விடுதிகளில் தங்கியுள்ளவர்கள், அரச உத்தியோகத்தர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், பிரபல ஹோட்டல் உரிமையாளர் எனப் பலர் உள்ளனர்.

குறித்த நபர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்ப சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்த போதும், சிலர் தாம் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதுடன், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள மாவட்டமட்ட உயர் அதிகாரியும் அதற்கு உடந்தையாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இவ்வாறு 12 பேர் வரையில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படாது வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, அறிகுறிகள் அற்ற கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கு சுற்று நிருபம் வெளியாகிய போதும்,

அச் சுற்று நிருபத்திற்கு அமைவாக வவுனியா சுகாதார சேவைகள் திணைக்களத்திடம் வாகன மற்றும் ஆளணி வசதிகள் இல்லாமையால் வவுனியாவில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

இந்நிலையில் குறித்த தொற்றாளர்களை உயர்மட்ட அழுத்தம் காரணமாக கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பவில்லை என தெரியவருகிறது.

ஆகவே, சாதாரண பொது மக்களுக்கு ஒரு சட்டமும், வசதி படைத்த மற்றும் செல்வாக்கானவர்களுக்கு ஒரு சட்டமுமா என பொது மக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது,

குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறும், எந்த மேல் மட்டம் அழுத்தம் கொடுப்பது என தமக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, அனைவரையும் சிகிச்சை நிலையத்திற்கு ஏற்றும் நடவடிக்கை நடைபெறுகிறது. அவை கட்டம் கட்டமாக நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.