வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒட்சிசன் இயந்திரம் வழங்கி வைப்பு!!

1363

ஒட்சிசன் இயந்திரம்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒட்சிசன் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபரும், வடமாகாண பிரதம செயலாளருமான சமன் பந்துலசேன, முன்னாள் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக,

ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஞானதிலக தேரரின் ஏற்பாட்டில் பிரான்சில் உள்ள சர்வதேச பௌத்த சமய அமைப்பைச் சேர்ந்த வர உபகார சந்திரதேரர் அவர்களினால் வைத்தியசாலை பணிப்பாளர் க.ராகுலனிடம் குறித்த ஒட்சிசன் இயந்திரம் இன்று (16.08) கையளிக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒட்சிசனுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நோயாளர்களுக்கு தேவையான ஒட்சிசனைப் பெற்றுக் கொடுப்பதற்காக சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான உயர்ஓட்ட நாசி ஒட்சிசன் கருவி ஒன்றே வழங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் நோயாளருக்கு தேவையான ஒட்சிசனை வழங்க முடியும்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாலால் டிசில்வா, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி மானவடு, வைத்திய அதிகாரி மதுரகன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.