வவுனியாவில் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுக்கும் பிரபல ஹோட்டல் உரிமையாளர்!!

4504

சுகாதாரப் பிரிவினரின் செயற்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு செல்வதற்கு கொரோனா தொற்றாளரான வவுனியாவில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று (15.08) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா கோவில்குளம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.

குறித்த தொற்றாளர் சுகாதாரத்துறையின் உயர்மட்டத்தில் உள்ள சில அதிகாரிகளின் உதவியுடன் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் வவுனியாவில் சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவு காரணமாக 12 பேரை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இதனையடுத்து நேற்றைய தினம் (15.08) சுகாதாரப் பிரிவினர் குறித்த ஹோட்டலுக்கு சென்று அதன் உரிமையாளரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த போது தன்னால் அங்கு வரமுடியாது எனத் தெரிவித்து, சுகாதாரப் பிரிவினரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளார். இதனால் சுகாதாரப் பிரிவினர் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளனர்.

அத்துடன் குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு வேறு நோய்கள் இருப்பதால் அவரை கொரோனா சிகிச்சை நிலையத்தில் வைத்தே சிகிச்சையளிக்க முடியும் எனவும், வைத்தியசாலையில் இல்லாது தனித்து இருப்பதால் நோய் தாக்கம் அதிகரிக்கலாம் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சமூகப் பொறுப்பு வாய்ந்த ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரப் பிரிவினரின் இயலாமை குறித்தும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் வவுனியாவில் கொரோனா பரம்பலை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டு மாவட்டமே அபாயத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என கவலை வெளியிட்டுள்ள பொதுமக்கள்,

அரசாங்கத்தின் சட்ட திட்டங்களை மதித்து கொரோனா தடுப்பு செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்காத நபர்கள் தொடர்பில் நாட்டின் கொவிட் செயலணியின் பொறுப்பதிகாரியான இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.