வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 800 பேருக்கு தடுப்பூசி வழங்க வேண்டியுள்ளது!!

1609

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 800 பேருக்கு இராணுவத்துடன் இணைந்து வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்கப்பட வேண்டியுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு குறித்து இன்று (24.08) கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட 98 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்க தீர்மானித்து கடந்த மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தோம்.

இதுவரை 30 வயதிற்கு மேற்பட்ட 83 ஆயிரத்து 151 பேருக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம். அதாவது 84.85 வீதமானவர்களுக்கு வழங்கியுள்ளோம். இவ்வாறு தடுப்பூசி வழங்குவதன் மூலம் நோயாளர்களின் இறப்பு வீதம் மற்றும் தொற்று பரம்பலை கட்டுப்படுத்த முடியும். அதனால் மக்கள் முன்வந்து தடுப்பூசி பெற்று கொள்ள வேண்டும்.

முக்கியமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இறப்பு அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றோம். வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 27 ஆயிரம் பேர் உள்ளனர்.

அதில் 5 ஆயிரத்து 800 பேருக்கு இன்னும் தடுப்பூசி வழங்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக இராணுவத்துடன் இணைந்து வீடு வீடாக சென்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த வாரம் முழுவதும் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கி அவர்களை இறப்பு மற்றும் நோய் தொற்றில் இருந்து காப்பதே எமது நோக்கம் எனவும் தெரிவித்தார்.