வவுனியா தோணிக்கல் பகுதியில் அன்டிஜன் பரிசோதனை : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 31 பேருக்கு கொரோனா தொற்று!!

3724

கொரோனா..

வவுனியா தோணிக்கல் பகுதியில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 31 பேருக்கு இன்று (26.08) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கொரோனாதொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் (25.08) 177 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதாரப் பிரிவினரால் பரவலாக எழுமாறான அன்டிஜன் பிரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், தோணிக்கல் பகுதியில் எழுமாறாக 93 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில் கர்ப்பிணிப் பெண் உள்ளடங்களாக உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கும், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 24 பேருக்குமாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை நேற்றையதினம் வவுனியாவில் 177 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் இதுவே வவுனியாவில் ஒரே நாளில் இனங்காணப்பட்ட அதிகபட்ச தொற்றாளர் எண்ணிக்கையாகும்.