ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? ஜனாதிபதி செயலணி இன்று கூடுகின்றது!!

1106

ஊரடங்கு சட்டம்..

தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? அல்லது 30ம் திகதியுடன் தளர்த்துவதா? என்பது தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். கோவிட் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இன்றைய தினம் கூடி, இந்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் பதிவாகின்ற கோவிட் தொற்றாளர்கள் மற்றும் பதிவாகின்ற கோவிட் மரணங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே, இன்றைய தினம் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, 30ம் திகதிக்கு பின்னர் நீடிக்கும் சாத்தியம் கிடையாது என்பதே, தனது தனிப்பட்ட கருத்து என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்று தெரிவித்திருந்தார்.

பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே, நாடு இம்முறை முடக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். நாட்டை முடக்கி, முன்னோக்கி செல்வது சிரமமானது என்பதே, உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் கருத்தாகும். நாட்டை திறந்து வைத்த நிலையிலேயே, கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் இடத்திற்கு உலக நாடுகள் வந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதனிடையே, தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என சுகாதார தரப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் அரசாங்கத்திடம் வலிறுயுத்தியுள்ளனர்.

எனினும், நாட்டை தொடர்ந்து முடக்காமல், ஏற்கனவே அறிவித்தபடி எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்குமாறு அரசின் மூத்த அமைச்சர்கள் பலர் அரச உயர்மட்டத்திடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.