
அஸ்வினின் பந்துவீச்சு, யுவராஜ் சிங்கின் துடுப்பாட்டத்தின் துணையுடன், அவுஸ்திரேலியாவை 73 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் 160 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியின் சார்பாக மேக்ஸ்வெல் 23 ஓட்டங்களையும், வோர்னர் 19 ஓட்டங்களையும், ஹாட்ஜ் 13 ஓட்டங்களையும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ஓட்டங்களை எடுத்தனர்.
இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 3.2 ஒவர்களில் 11 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்குமார், மோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியனர்.
மிர்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இந்தியாவுக்கு வழங்கியது.
இந்திய அணி தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களை எடுத்தது.
அவுஸ்திரேலிய தரப்பில் ஹாட்ஜ், மேக்ஸ்வல், ஸ்டார்க், வட்சன், பொலிஞ்சர் மற்றும் மியூர்ஹெட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 10 சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்தியா ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.





