வவுனியா மாவட்டத்தில் 55 வீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்!!

1261

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட 55.59 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா, வுவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட 84.62 வீதமானவர்கள் முதலாவது டோஸ் தடுப்பூசிகளையும், 55.59 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

ஏனையவர்களும் அடுத்து வரும் நாட்களில் தடுப்பூசி ஏற்றப்படும் இடங்களுக்குச் சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களில் 89.25 வீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.