யாழ். சுன்னாகத்தில் வாள் வெட்டுக்கு இலக்காகி மூவர் படுகாயம்!!

1024

Crimeஆலயம் ஒன்றில் நடைபெற்ற அன்னதானத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் மீது தனிப்பட்ட குரோதம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் பாடுகாயமடைந்தனர். அவர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் சுன்னாகம் மதவடி ஒழுங்கையில் உள்ள பூதராயர் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபர்கள் வரும் வழியில் மறைவான இடத்தில் வாளுடன் நின்ற சந்தேக நபர் உரியவர்கள் வந்ததும் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து வெட்டினார் என்று கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் சிவனடியார் சிவலிங்கநாதன் (53), சுவாமிநாதன் அரசதாசன் (44), இ.இராமேஸ்வரன் (64) என்பவர்களே வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டவர்களாவர்.

இதேவேளை சிவலிங்கநாதன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணையை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார், குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் சுன்னாகம் தெற்கு சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளார்கள்.

குறிப்பிட்ட வாள் வெட்டு சம்பவத்திற்கு காதல் பிரச்சினை ஒன்றே காரணம் என பொது மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.