
நடிகர் கமலஹாசன் பத்மபூஷன் விருது பெற்று சென்னை திரும்பி உள்ளார். அடுத்து விஸ்வரூபம்–2 பட வேலையில் தீவிரமாக இறங்குகிறார்.
இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே விஸ்வரூபம் 2வது பாகத்தை எடுப்பது குறித்து கமல் கருத்து தெரிவிக்கையில் முழு கதையையும் சொல்ல வேண்டும் என்பதற்காகவே தொடர்ச்சியை எடுக்கின்றேன் என்றார்.
இந்த படத்தை எடுப்பதற்காக பிடிவாதம் காரணம் அல்ல, என் நம்பிக்கை என்றும் கூறினார். விளம்பரத்துக்காக நான் படங்கள் எடுக்கவில்லை. மக்கள் ரசிப்பதற்காகவே எடுக்கிறேன் என்றும் தெளிவுபடுத்தினார்.
கடந்த வருடம் விஸ்வரூபம் படம் வெளியாவதில் தடங்கள் ஏற்பட்டபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று ஆவேசமாக பேட்டி அளித்தார். சொத்துக்கள் எல்லாவற்றையும் இந்த படத்தில் போட்டுள்ளேன். படம் ரிலீசாகா விட்டால் தெருவுக்கு வந்து விடுவேன். என்னை தமிழகத்தில் இருந்து வெளியேற்றி விட நினைக்கிறார்கள். தமிழகத்தை விட்டு வெளியேறி வேறு மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ குடியேறுவேன் என்றெல்லாம் ஆதங்கப்பட்டார்.
பத்மபூஷன் விருது பெற்று திரும்பிய கமலிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது எதிர்காலத்தில் கோபப்பட்டு இந்த நாட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு எடுக்க மாட்டேன். உணர்ச்சி வசப்பட்டு அப்படி பேசவும் மாட்டேன் என்றார்.
விஸ்வரூபம்–2 படத்தில் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். ராகுல்போஸ், ஜெய்லீப், வகீதாரஹ்மான், ஆனந்த்கோ தேவன் போன்றோரும் நடித்துள்ளனர். கமலஹாசனே இப்படத்தை இயக்கியுள்ளார். அடுத்த மாதம் (மே) இறுதியில் இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





