
T20 உலக கிண்ணத்தை கைப்பற்றினால் இலங்கை அணி வீரர்களுக்கு அதிஷ்டம் காத்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
T20 உலக கிண்ணத் தொடர் கிரிக்கெட்டில் நடந்த முதலாவது அரையிறுதியில் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மழையால் கொண்டு வரப்பட்ட டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி இலங்கை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்விக்கு பிறகு ஊடகங்களுக்கு பேட்டியளித்த நடப்பு சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் டேரன் சேமி, கிண்ணத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்கை நிறைவேற்ற முடியாமல் தாயகம் திரும்புகிறோம்.
டக்வொர்த்-லீவிசால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது. இலங்கை வீரர்கள் உண்மையிலேயே அபாரமாக பந்து வீசினார்கள்.
நாங்கள் துடுப்பாட்டத்தை நன்றாக தொடங்கிய போதிலும், அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்களான கெய்ல், சுமித் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர். இதன் மூலம் நாங்கள் ஓட்ட பட்டியலில் மிகவும் பின்தங்கி விட்டோம். இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.
1996ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணி, அதன் பிறகு எந்த ஒரு பெரிய பட்டத்தையும் வென்றதில்லை. இரண்டு முறை ஒரு நாள் போட்டி உலக கிண்ண இறுதி ஆட்டத்திலும் (2007, 2011 ), இரண்டு முறை T20 உலக கிண்ண இறுதி ஆட்டத்திலும் (2009, 2012 ) தோற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் சபையின் அவசர செயற்குழு கூட்டம் கொழும்பில் நேற்று நடந்தது. இதில், இலங்கை அணி T20 உலக கிண்ணத்தை வெற்றிபெற்றால் அந்த அணி வீரர்களுக்கு 9 கோடி ரூபாய் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதில் 3 கோடி போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்களுக்கு வழக்கமாக வழங்க வேண்டிய கட்டணம் மீதமுள்ள 6 கோடி போனசாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.





