

20க்கு இருபது மகளிர் உலகக் கிண்ண தொடரில் 6 விக்கெட்டுக்களால் இங்கிலாந்தை வீழ்த்தி, அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.
பங்களாதேஷில் இடம்பெற்ற இந்தத் தொடரில் மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகின.
இதில் முதலாவது அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொண்ட அவுஸ்திரேலிய மகளிர் அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
அத்துடன் இரண்டாவது அரையிறுதியில் தென்னாபிரிக்காவை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
இதன்படி இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதனையடுத்து, முதலில் துடுப்புடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 105 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.
பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.





