

ஐந்தாவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறுதிப்போட்டியை 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் விராட் கோலி 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
ஒரு கட்டத்தில் 16 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 111 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடிய போதும் இலங்கை அணியின் ஆபார பந்துவீசினால் இறுதி 4 ஓவர்களில் 19 ஓட்டங்களை மட்டுமே மேற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் குலசேகர, மத்தியூஸ், ஹேரத், மலிங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது. இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சங்கக்கார ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை அணியின் இரு முக்கிய வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் இந்தத் தொடருடன் 20க்கு இருபது போட்டிகளில் இருந்து விலகுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இருமுறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து (2009 மற்றும் 2012) கிண்ணத்தை தவறவிட்ட இலங்கை அணி இம்முறை அபாரமாக துடுப்பெடுத்தாடி கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளது.
இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணி வீரர் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தொடர் நாயகனாக இந்திய அணி வீரர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.





