கவனயீர்ப்பு பேரணி..
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரினால் நகரில் கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இடம்பெற்றிருந்தது.
வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலின் முன்பாக இன்று (10.12.2021) காலை 10.30 மணியளில் பேரணி ஆரம்பமாகி மணிக்கூட்டு கோபுரம் வழியாக பழைய பேரூந்து நிலையத்தினை சென்றடைந்து பழைய பேரூந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றிருந்தது.
பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்கள் கறுப்பு நிற ஆடையணித்து ஓர் கையில் தீப்பந்தம் எந்தியதுடன் மறு கையில் காணாமல் போன அவர்களது உறவுகளின் புகைப்படங்களையும் ஏந்தி பேரணியில் சென்றதுடன்,
மனித உரிமை மீறப்பட்ட நாடடில் மனித உரிமை பற்றி பேசலாமா?, நீதியில்லா நாட்டில் நீதிமன்றம் எதற்கு, தமிழ் இனத்தின் உரிமை மறுக்கப்பட்ட நாடு ஸ்ரீலங்கா, வேண்டாம் வேண்டாம் இழப்பீடு வேண்டாம், விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிளை விடுதலை செய் என்ற கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இப் போராட்டத்தில் 50க்கு மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் முன்னான் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.