யாழில் வீதியில் கிடந்த தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள் : இளைஞனின் நேர்மையான செயல்!!

2312

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணப்பையை தவற விட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளைஞர் ஒருவர்.

அரியாலையில் பேருந்தில் ஏறும் போது கைப்பை ஒன்றை தவற விட்டுள்ளனர். அந்தப் பையில் தாலி கொடி உள்ளிட்ட பல பொருட்கள் இருந்துள்ளன.

குறித்த பணப்பையை கண்டெடுத்த இளைஞன் ஒருவர் உரியவர்களிடம் கொடுத்துள்ளமை பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்- அரியாலையை சேர்ந்த 22 வயதான தியானேஸ் மதுசன் என்ற இளைஞனே இந்த மனிதாபிமான செயலை செய்துள்ளார்.

பேருந்து வந்துவிட்டது என்ற பரபரப்பில் அவசரமாக ஏறும்போது, அரியாலை பஸ் தரிப்பிடத்தில் கைப்பை தவறி கீழே விழுந்ததை அதன் உரிமையாளர் கவனிக்கத் தவறிவிட்டார்.

ஆனால் அந்தவழியாகச் சென்ற தியானேஸ் மதுசனின் கண்களில் அந்தக் கைப்பை அகப்பட்டுள்ளது. எடுத்துத் திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உள்ளே தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள் இருந்தமையே இதற்கு காரணமாகும்.

பணப்பையிலிருந்து உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து, விடயத்தைக் கூறியதோடு , கைப்பைக்கு உரியவரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாண உறவினரிடம் நேரில் சென்று ஒப்படைத்துமுள்ளார்.

சமகாலத்தில் தங்கத்தின் விலை மிகவும் உயர்ந்த மட்டத்தில் உள்ளது. பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கண்டெடுத்த போதும்,

அதனை உரியவர்களிடம் ஒப்படைத்த அவரின் நேர்மையான செயல் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.