கைகலப்பு..
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்குள் மாடு நுழைந்தமையால் ஏற்பட்ட கைகலப்பில் பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை (11.12) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றுக்குள் அப் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று வளர்க்கும் மாடுகள் உட் சென்றுள்ளதாக பண்ணையில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மாட்டு உரிமையாளர்கள் அவ்விடத்திற்கு சென்ற போது பண்ணையில் இருந்தோருக்கும், மாட்டு உரிமையாளர்களான கணவன், மனைவிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வாய் தர்க்கமானது கைகலப்பாக மாறியதில் பெண் ஒருவரும், பண்ணையில் இருந்த ஒருவரும் காயமடைந்துள்ளனர். இச் சம்பவத்தையடுத்து பண்ணையில் நின்றவர்கள் வீதியில் சென்ற போது அங்கு வந்த சிலர் அவர்களை வழி மறித்து தாக்கியுள்ளனர்.
இதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இக் கைகலப்பு சம்பவங்களில் மாட்டு உரிமையாளரின் மனைவியான பெண் மற்றும் பண்ணையில் இருந்தோர் இருவர் என மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சமபவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.