மணிக்கூட்டுக் கோபுரம்..
வவுனியா நகர மத்தியில் காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரமானது கடந்த பல மாதங்களாக இயங்காத நிலையில் காணப்படுவதுடன் இவ்வாறான மணிக்கூட்டு கோபுரம் நகரின் மத்தியில் ஏன் என்ற விசனம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நகரத்துக்கு மத்தியில் அதாவது பொதுச்சந்தை, வங்கிகள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றிக்கு செல்லும் பாதையில் காணப்படுகின்ற இம்மணிக்கூட்டு கோபுரமானது கடந்த வருடங்களில் சீரான முறையில் இயங்கியதுடன் வடக்கின் வாயிலாக வவுனியா நகரம் காணப்படும் நிலையில் இம் மணிக்கூட்டு போபுரம் பலருக்கு நேரம் பார்ப்பது உதவியாக காணப்பட்டது.
மணிக்கூட்டு கோபுரம் பல லட்சம் செலவில் நகரசபையினரால் புதுப்பிக்கப்பட்டிருந்ததுடன் சில நேரத்தில் அவை தவறான நேரத்தினை காட்டியவண்ணம் காணப்பட்டது.
அதன் பின்னர் தற்போது முற்றாக செயலிழந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் உட்பட எமது பகுதி மக்களும் வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தில் நேரம் காட்டாமையினையடுத்து ஏமாற்றம் அடைகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா நகரசபையினரை தொடர்பு கொண்டு வினாவிய போது, குறித்த மணிக்கூட்டு கோபுரம் கடந்த பல வருடங்களாக நகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்டது.
குறித்த மணிக்கூட்டு கோபுரத்தில் விளம்பரப்படுத்தல் மூலம் நிதியினை ஈட்டி அதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதியில் மணிக்கூட்டு கோபுர பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தோம்.
ஆனால் தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பொறியியலாளர் மணிக்கூட்டு கோபுரம் அவர்களது அதிகார சபைக்கு சொந்தமானது என தெரிவித்தமையுடன் மணிக்கூட்டு கோபுரத்தில் நகரசபையினர் எவ்வித விளம்பரப்படுத்தல் குத்தகைக்கும் வழங்க முடியாது என தெரிவித்தார்.
இந்நிலையினாலேயே நகரசபைக்கு தற்போது அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக எம்மால் மணிக்கூட்டு கோபுரத்தினை மீள்திருத்தம் மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்தனர்.
நகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றிக்கு இடையே ஏற்பட்டுள்ள சிறு பிரச்சனையின் காரணமாக மணிக்கூட்டு கோபுரம் தற்போது மக்களுக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றது.