தமிழ் மண்ணில் தமிழனை மிரட்டுவதா : தெலுங்கு அமைப்புகளுக்கு இயக்குனர் வ.கௌதமன் கண்டனம்!!

571

Kowthamanநடிகர் வடிவேலு நடிக்கும் தெனாலி ராமன் படத்துக்கு தெலுங்கு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் கிருஷ்ண தேவராயர் குறித்து தவறாகச் சொல்லப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் தெலுங்கு அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். சீமானைத் தொடர்ந்து இயக்குனர் வ.கௌதமனும் தெலுங்கு அமைப்புகளுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

தமிழ் திரையுலகில் என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, கவுண்டமணி வரிசையில் நகைச்சுவையின் உச்சமான தமிழ் கலைஞன் வடிவேலு. அப்படிப்பட்ட ஒருவரை தமிழ் மண்ணில், அதுவும் அவரது வீட்டிற்கே வந்து ஒரு பெரும் கூட்டத்துடன் மிரட்டி விட்டு சென்றிருப்பது மிகவும் வேதனையளிப்பது மட்டுமின்றி மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் சீண்டிப் பார்க்கும் செயலாகும். இது மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஒரு திரைப்படம் என்பது கதை ஆசிரியரால் தொடங்கி, தயாரிப்பாளரால் திட்டமிட்டு, இயக்குனரால் செயல்படுத்தப்படுவது. அப்படியிருக்க நேரடியாக அதில் நடித்த நடிகனை முற்றுகையிடுவது என்பதும், அவமானப்படுத்துவதும், அச்சுறுத்துவதும் நேர்மையானதல்ல.

தமிழினம் இந்த மண்ணில் சாதி, மதம், மொழி, இனம் கடந்து அனைத்து கலைஞர்களையும், சாதனையாளர்களையும், சான்றோர்களையும் போற்றி பாதுகாத்த இனம். மாற்றாரை வாழ வைத்த இனம் மட்டுமல்ல, ஆள வைத்த இனமும்கூட.

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் (குறிப்பாக நடிக, நடிகையர்கள்) தமிழர்கள் அல்லாது பிற மாநிலத்தவர்கள் அல்லது பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களே கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் இதுவரை நாங்கள் பிரித்துப் பார்க்காமல் ஒரே குடும்பமாக கூடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தெனாலிராமன் பட விவகாரத்தில் வடிவேலுவிடம் அத்துமீறியவர்களின் செயல்பாடுகளை நினைத்துப் பார்க்கும்போது எங்கே இதற்கெல்லலாம் வேட்டு வைத்துவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. வடிவேலு அவர்கள் இனம், மொழி பார்க்காமல் அனைவரையும் சிரிக்கவைத்த ஒரு மகா கலைஞன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் திரைக்கு வருவதை தமிழ் மக்கள் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி உரிய முறையோடு நடந்து கொள்வது என்பதுதான், அவர்களுக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது.

அதனை விடுத்து இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதை வடிவேலுவிடம் மட்டுமல்ல தமிழ் மண்ணில் தனிப்பட்ட ஒரு தமிழனிடமோ அல்லது ஒட்டுமொத்த தமிழனத்தையோ உரசிப் பார்க்கும் நிகழ்வாக கருதி அதற்கேற்ற பின்விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆகவேண்டும் என்பதை கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.