இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க இலங்கை அணி வீரர்கள் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடை விதித்ததாக தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இலங்கை அணி வீரர் மஹேல ஜயவர்த்தன இத்தகவலை வெளியிட்டார்.
தமது ஓய்வு குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவிக்காமல் ஊடகங்களுக்கு அறிவித்ததால் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹேல ஜயவர்த்தனவின் கருத்துடன் குமார் சங்கக்கார இணங்கினார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அழுத்தம் ஊடகங்களின் விமர்சனம் இவை எல்லாவற்றிற்கும் முகங்கொடுத்தே வெற்றியை பெற்றதாக குமார் சங்கக்கார தெரிவித்தார்.
ஊடகங்கள் விமர்சனம் செய்ய வேண்டியது அவசியம் எனவும் சில ஊடகங்கள் அநாவசிய விமர்சனங்களை செய்வதாகவும் குமார் சங்கக்கார தெரிவித்தார்.
எனினும் இலங்கை மக்களுக்காக கிரிக்கெட் விளையாட்டில் கூடிய கவனம் செலுத்தி கிண்ணத்தை வென்றதாக குமார் சங்கக்கார குறிப்பிட்டார்.
இதேவேளை, தினேஷ் சந்திமால் முதல் பாதியில் தனது பணியை சிறப்பாக செய்ததன் பின் மூன்று போட்டிகளுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் அதன்போது வீரர்களின் திறமை அறிந்து அவர்களை சரிவர பயன்படுத்தி அணியாக ஒன்றிணைந்து செயற்பட்டதால் வெற்றி கிடைத்ததாகவும் லசித் மலிங்க தெரிவித்தார்.